Thursday, July 24, 2008

போலி-க்கு கிடைத்த தண்டனை ....

நண்பர்களே டோண்டு ஐயா அவர்களின் இந்த பதிவை படிக்க நேர்ந்தது !! அதனை பற்றிய எனது கருத்துக்களை இங்கு வைக்கிறேன்.

அதற்குமுன், நான் பதிவுலகிற்கு புதியவன் என்பதையும், இந்த போலி பிரச்சனை பற்றிய அறிவு எனக்கு வெகு சமீபத்தில் தான் -அதுவும் வெகு சிறிய அளவிலே தான் கிடைத்தது என்பதையும் குறிப்பிட்டுவிடுகிறேன்.

டோண்டு அவ்ர்களை பற்றியும் மற்ற சிலரை பற்றியும் போலி தவறாகவும் அவதூறாகவும் பல வழிகளில் எழுதி இருந்திருக்கிறார். அது கொஞ்சமும் சந்தேகமின்றி அருவருக்கத்தக்க செயலே. அவர் நேர்மையாக, கருத்து மோதல்களை எதிர் கருத்துகளால் மட்டுமே எதிர்த்திருக்க வேண்டும். அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது.

//மூர்த்திக்கு மலேஷியாவில் பார்த்த வேலை பறிபோயிற்று. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. //

இதை படித்த பொழுது, மிகவும் வருத்தபட்டேன். ஒரு மேல்நாட்டு பழமொழி நினைவிற்கு வருகிறது. தமிழில் சொன்னால் "எதை எந்த அளவிற்கு விமர்சிப்பது என்பது முக்கியம். உன் நண்பனின் தோள் மீது இருக்கும் ஈயை விரட்ட கோடலியை வீசி விடாதே"

கொலை கேசில் சிக்கியவர் அவரது 'மடாதிபதி' வேலையே தொடர முடிகிறது; ஊறுகாய் வியாபாரியை ஏமாற்றியவர் சாவுக்கு அப்புறமே தீர்ப்பு வரும்படி பார்த்து கொள்ளப்படுகிறது; ஆனால் பாவம் ஒரு சில தனி மனிதர்களை தாக்கி எழுதிய மூர்த்தி போன்றவர்களுக்கு, அவை தகாதமுறையில் எழுதப்பட்டவை என்ற காரணத்திற்காக வேலை பறிக்க படுகிறது, கடவு சீட்டு பறிக்க படுகிறது !!!

பள்ளி அல்லது கல்லூரி மாணவன் ஒருவன் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் மினஞ்சல் அனுப்பினால், அந்த மிரட்டலுக்கான உளவியல் காரணங்களை கொஞ்சமும் சட்டை செய்யாமல், அந்த மாணவனை தண்டித்தால் அது சரியான செயலா ?

பெரியாரை பற்றி, கொளத்தூர் மணி பற்றி விக்கி பீடியாவில் தேடி பாருங்கள். விஷமமான செய்திகள் மட்டுமே இருக்கும். ஏனெனில் அதை எழுதியவர்களின் சமூக பின்னணி அப்படி!! தாங்கள் பெற்றிருக்கும் முன்னேற்ற நிலையையும் அதன் மூலம் அடைந்த கணினி வசதிகளையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஒரு சமுதாயத்தை கீழ்த்தரமாகவும், அதன் இழிவை நீக்க பாடுபட்ட தலைவர்களையும், அவர்களை பின்பற்றி பல ஆக்க செயல்களில் ஈடுபட்டு வரும் இந்நாள் தலைவர்களையும் தொடர்ச்சியாக நய்யாண்டி செய்து எழுதிவருபர்களுக்கு எந்த தண்டனையும் இல்லையா ? அவர்கள் எல்லோரும் போலி அவர்களின் இந்த செயல்பாட்டுக்கு ஒருவகையில் கூட காரணம் இல்லையா ?

இரு அணியினரும் போலி அவர்களின் பக்கங்களுக்கு சென்று அவற்றை படித்து - அவரின் ஹிட் கவுண்ட்-ஐ ஏற்றியதன் மூலம் மறைமுகமாக செய்தவை 'இந்த செய்கையை ஊக்கபடுத்தியதாகாதா ? ஏதோ ஒரு வகையில் நாம் எல்லாருக்குமே அவரது குற்றத்தில் பங்கு இருக்கிறது . ஆனால் பாவம் தண்டனை மட்டும் அவருக்கு.